செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதல்வர் ஜோசப் விஜய்யின் மனைவி சங்கீதா திரும்பப் பெற்றார்.தமிழ்நாடு முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு சங்கீதா மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தனது கணவர் விஜய், பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால், அவரிடமிருந்து விவாகரத்தும், நிரந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், இதுவரை மூன்று முறை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.கடந்த ஜூன் 15 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் காணொலி வாயிலாக விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்த நிலையில், இன்று காலை காணொலி வாயிலாக விசாரணைக்கு சங்கீதா ஆஜரான நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் முதல்வர் விஜய்யால் ஆஜராக முடியவில்லை என்றும் வேறொரு நாளுக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சங்கீதா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றி, பிற்பகலுக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதியிடம் சுமார் 20 நிமிடங்கள் காணொலி வாயிலாக சங்கீதா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அப்போது, விஜய்க்கு எதிரான விவாகரத்து மனுவை திரும்பப் பெறுவதாக நீதிபதியிடம் சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்று, விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.Vijay's wife Sangeetha withdraws divorce case against him