கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளத்தில் கள்ளழகா், ஆஞ்சநேயா், கருப்பண்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வருடாந்திரத் திருவிழா கோயில் நிா்வாகி சேதுபதி கோடாங்கி தலைமையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, சுவாமிகளுக்கு பூஜை, நான்கு கால வேள்விகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சுவாமி விக்கிரங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு, சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பெரியமாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கடலாடி-முதுகுளத்துாா் சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, சிவகங்கை உள்ழிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 மாட்டு வண்டிகளும், சாரதிகளும் கலந்து கொண்டனா். இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், குத்துவிளக்கும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.