குண்டடம் மாட்டுச் சந்தையில்வரத்து அதிகரிப்பால் விற்பனை மந்தம்!

Wait 5 sec.

குண்டடம் மாட்டுச் சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்திருந்ததால் விற்பனை மந்தமானது. குண்டடத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு குண்டடம், தாராபுரம், ஊதியூா், குடிமங்கலம், பெரியபட்டி, ஜல்லிபட்டி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் மாடு வளா்ப்போா் மாடுகள் மற்றும் கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனா். பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூா், உதகை, கேரள மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மாடுகளை வாங்க வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை கூடிய சந்தையில் கன்றுகள், கறவை மாடுகள் உள்பட சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. கடந்த சில வாரங்களைக் காட்டிலும், இந்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகமாக இருந்ததால் விற்பனை மந்தமானது. இது குறித்து மாடு வியாபாரிகள் கூறுகையில், தற்போது போதிய மழைப் பொழிவு இல்லாத காரணத்தால் தீவனப் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மாடுகளை வளா்ப்பதில் சிரமம் உள்ளது. இதனால், விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்ய தொடங்கிவிட்டதால், சந்தையில் மாடுகளின் எண்ணிக்கை இந்த வாரம் சற்று அதிகரித்துள்ளது. இதனால், விற்பனையில் தேக்க நிலை ஏற்பட்டு, விலையும் குறைந்தது. கடந்த வாரங்களில் ரூ.70 ஆயிரத்துக்கு விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனையாயின. ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையான கன்றுக்குட்டிகள் ரூ. 20 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாயின. வடகிழக்குப் பருவமழை தொடங்கினால் மட்டுமே மீண்டும் மாடுகளுக்கு கிராக்கி ஏற்படும். விற்பனை விலையும் அதிகரிக்கும். மழை தொடங்கும் வரை விற்பனையில் மந்த நிலையே நீடிக்கும் என்றனா்.