ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சொா்ணபாதுகா பூஜை

Wait 5 sec.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அவரது சொா்ணபாதுகைக்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பாதுகா பூஜையும், சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினா்.காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசாரியா் சுவாமிகள். இவரது 92-ஆவது அவதார தினத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருஉருவச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த சொா்ண பாதுகைக்கு சாதுா்மாஸ்ய விரதம் இருந்து வரும் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் புஷ்பாஞ்சலியும், ஆரத்தியும், சிறப்பு தீபாராதனைகளும் செய்து வழிபட்டனா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஓரிக்கை முகாம் மேலாளா் ஜானகிராமன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார தினத்தையொட்டி காலையில் உலக நன்மைக்காக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீமடத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஸ்ரீஜெயேந்திரா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் செய்திருந்தனா்.காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் கல்லூரி வளாகத்தில் ஜெயேந்திரரின் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. பின்னா் கல்லூரி வளாகத்தில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் முன்பாகவும் சங்கரா கல்லூரி சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.