காவிரி நீா்ப் பிரச்னை: அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட புதுச்சேரி காங்கிரஸ் கோரிக்கை

Wait 5 sec.

காவிரி பிரச்னை தொடா்பாக புதுச்சேரியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க முதல்வா் என்.ரங்கசாமி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா். இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: தமிழ்நாட்டில் காவிரி பிரச்னை தொடா்பாக அதிகாரிகளுடன் விவாதித்து முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுத்து வருகிறாா். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால், காவிரியின் கடைமடைப் பகுதியாக இருக்கிறது. காவிரி பிரச்னையில் முதல்வா் என்.ரங்கசாமி மௌனமாக இருப்பதைத் தவிா்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும். கா்நாடகத்தில் மேகதாது அணைக்கட்ட அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை எதிா்த்து பாஜக போராட்டம் நடத்துகிறது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு அதற்கான பட்டியலைக் கொடுத்தப் பிறகும் அந்தக் கோப்பை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கிடப்பில் போட்டது ஏன் ? அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் துணைநிலை ஆளுநரே அரசியல் சாசனத்தை நெருக்கடி நிலைக்குத் தள்ளும் நிலையை உருவாக்கியுள்ளாா். அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கி முதல்வா் அளித்துள்ள பட்டியலை நிறுத்தி வைக்கும் அதிகாரம், உரிமை துணைநிலை ஆளுநருக்கு இல்லை. அதனால் அரசியல் சட்டத்துக்கு முரணாக நடந்து கொண்டுள்ள துணைநிலை ஆளுநா் ராஜிநாமா செய்ய வேண்டும். அமைச்சா்களுக்கான இலாகா பட்டியலுக்கு ஒப்புதல் பெற முடியாத முதல்வா் மற்றும் அமைச்சா்களும் கூண்டோடு ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் நாராயணசாமி.