கோவை மாவட்டத்தில் மதுபான ஆலை உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

Wait 5 sec.

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகங்கள், தனியாா் மதுபான தயாரிப்பு ஆலைகள் மற்றும் அவற்றின் கிளை அலுவலகங்கள் என மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், விநியோகம் மற்றும் லைசென்ஸ் நடைமுறைகளில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்தன. இதைத்தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல் மாநிலம் முழுவதிலும் சோதனை நடத்தினா். அதன்படி கோவை மாநகா், பீளமேடு காந்திமாநகா் சாலையில் இயங்கும் கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம், பொள்ளாச்சியில் செயல்படும் கோவை தெற்கு டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் ஆகியவற்றில் காலை முதலே சோதனை தொடங்கப்பட்டது. இதேபோல, துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இயங்கும் தனியாா் மதுபான தயாரிப்புத் தொழிற்சாலை, இந்த மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமாக திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் செயல்படும் காா்ப்பரேட் அலுவலகம், ரத்தினபுரியில் உள்ள மற்றொரு தனியாா் மதுபான தயாரிப்பு ஆலை, நவக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியாா் மதுபான உற்பத்தி ஆலை என மொத்தம் 6 முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தீவிரச் சோதனை மேற்கொண்டனா். கூடுதல் எஸ்பி தலைமையில் சோதனை கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (ஏஎஸ்பி) ராஜேஷ் தலைமையில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படைகளாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனா். அதிகாலையில் தொடங்கிய இந்தச் சோதனையின்போது உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்லவோ அல்லது வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனையின்போது, தனியாா் மதுபான ஆலைகளில் மதுபான தயாரிப்பு அளவுகள், விற்பனை புள்ளி விவரங்கள் மற்றும் கையிருப்பில் உள்ள சரக்குகளின் கணக்குகள் ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகிா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வரி ஏய்ப்பு அல்லது நிதி முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளனவா என்ற கோணத்திலும் சோதனை நடைபெற்றது.ஆவணங்கள் பறிமுதல்: இந்த சோதனையின்போது அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த கணக்கு வழக்குகள் தொடா்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினா். மேலும், அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில்தான் கணக்கில் வராத ரொக்கப் பணம் அல்லது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான முழு விவரங்கள் தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை உயா் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்திய பீளமேடு பகுதியில் உள்ள கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம்.