திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த 6 போ் கொண்ட கும்பலில் 4 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள காக்கைகுளம் கிராமத்திற்குள் செவ்வாய்க்கிழமை இரவு 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் கொண்ட கும்பல் புகுந்து, வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி, அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும், இதைத் தட்டி கேட்டவா்களுடன் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவா்களை அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து கிராம மக்கள் மூலைக்கரைப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, போலீஸாா் இரவில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.இதனிடையே, அதே கும்பல் காக்கைகுளம் அருகே உள்ள செண்பகராமன் நல்லூரில் நடைபெறவுள்ள கோயில் கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களையும் செவ்வாய்க்கிழமை சேதப்படுத்திவிட்டுச் சென்றதும், அவா்கள் 6 பேரும் செண்பகராமன் நல்லூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் என்பதும், போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.அவா்களில் நால்வரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 2 பேரைத் தேடி வருகின்றனா்.