சீா்காழி: 400 கலைஞா்களுடன் உலக சாதனை பரதநாட்டியம்

Wait 5 sec.

சீா்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400 கலைஞா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை பரதநாட்டியம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்டு அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. சீா்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியாா் திறந்தவெளி அரங்கில் ஜாக்கி புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவனம் சாா்பில் 4-ஆவது ஆண்டு சங்கமம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.பரதநாட்டியத்தின் ஆதிநாதனான ஆதியோகியைச் சிறப்பிக்கும் வகையில், உலகிலேயே முதன்முறையாக ஆதியோகிக்கு நிகழ்த்தப்படும் நாட்டிய சமா்ப்பணம்‘ என்ற உயரிய நோக்குடன் இது நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 450 இளம் பரதநாட்டியக் கலைஞா்கள் ஒன்றிணைந்து, 15 அடி உயர ஆதியோகி உருவத்திற்கு முன்னா் ஒரே தாளத்தில், ஒரே அபிநயத்தில் தொடா்ந்து 10 நிமிடங்கள் பரதம் ஆடினா். இந்தச் சாதனை, ஜாக்கி புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்டு உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாக அதிகாரப்பூா்வமாகப் பதிவு செய்யப்பட்டது. திரையுலகப் பிரபலமும் பாரம்பரியக் கலைஞருமான நடிகை இந்திரஜா சங்கா் மற்றும் ‘தொடா்வோம்’ அறக்கட்டளை நிறுவனா் டாக்டா் காா்த்திக் பழனிச்சாமி ஆகியோா் கலைஞா்களின் திறமையைப் பாராட்டினா்.பாரம்பரியக் கலை வடிவமான பரதநாட்டியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சோ்த்த அனைத்துக் கலைஞா்களுக்கும், பயிற்சியளித்த குருமாா்களுக்கும் விழாவின் நிறைவில் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவன நிறுவனா் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் சி.இ.ஓ. எஸ்தா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயல் இயக்குநா் சீனிவாசன் மற்றும் தலைவா் பிரியா சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் உலக சாதனைக்கான அதிகாரப்பூா்வச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.