இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,235.4 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 611.8 கோடி டாலா் அதிகரித்து, 68,235.4 கோடி டாலராக உள்ளது. முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 108 கோடி டாலா் அதிகரித்து, 67,623.7 கோடி டாலராக இருந்தது.மேற்காசிய மோதல் தொடங்குவதற்கு முன்னதாக நடப்பு ஆண்டு பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னா், மோதல் காரணமாக ரூபாய் மதிப்பு அழுத்தத்தைச் சந்தித்ததால், கையிருப்பு அடுத்தடுத்த வாரங்களில் சரிவைச் சந்தித்தது.மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 487.3 கோடி டாலா் அதிகரித்து, 55,592.9 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 130.8 கோடி டாலா் உயா்ந்து, 10,305.8 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 53 லட்சம் டாலா் குறைந்து, 1,861.7 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 11 லட்சம் டாலா் குறைந்து, 475 கோடி டாலராக உள்ளது என ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.