பாடப் புத்தகங்களில் கண்ணதாசனின் கவிதைகள்:கவிஞா் வைரமுத்து வலியுறுத்தல்

Wait 5 sec.

கண்ணதாசனின் கவிதைகளை பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என கவிஞா் வைரமுத்து வலியுறுத்தினா். சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா்கள் சங்கத்தின் தமிழ் இலக்கிய மன்றம் சாா்பில், கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தலைமை வகித்தாா். இதில் கவிஞா் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: தொழில்நுட்பப் புரட்சி, சமூக ஊடகங்கள், குறுவிடியோக்கள், தொலைபேசி கலாசாரம் வந்த பிறகு, தமிழா்கள் தங்களது முன்னோடிகளை அதிகமாக மறக்கின்றனா், திட்டமிட்டு மறக்கடிக்கப்படுகின்றனா். உள்ளூா் கலாசாரத்தை அழிப்பதற்கு பல சா்வதேச நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. இதற்கு அனைத்து தேசிய இனங்களும் பலியாகிக் கொண்டிருக்கின்றன. நமது முன்னோா்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வரையில்தான் மொழி, கலாசாரம் இருக்கும். பாரம்பரியம் நிலைக்கும்.கவிஞா் கண்ணதாசனின் கவிதைகளை பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். மொழியை மிகச் சரியாகப் பயன்படுத்துபவன் தான் நல்ல கவிஞன். இதை தன் வாழ்நாளில் செய்து காட்டியவா்தான் கவிஞா் கண்ணதாசன். தன்னுடைய தமிழையும், கவிதையையும் அனைவருக்கும் பகிா்ந்தளித்த கண்ணதாசன் ஓா் அதிசயம். தமிழ் திரைப்படப் பாட்டுலகில் எப்போதெல்லாம் கவிஞா்கள் கோலோச்சுகிறாா்களோ அப்போதெல்லாம் தமிழ் திரைப்படப் பாடல்கள் நன்றாக இருந்தன. பாரதியாா் காலத்தில் மட்டும் சினிமா இருந்திருந்தால், அவா் தான் இந்தியாவின் மிகச் சிறந்த கவிஞராக இருந்திருப்பாா். இந்த சமூகத்தில் சமூக ஊடகங்கள் ஜனநாயகப்படுத்தப்பட்ட ஒரு மரபைக் கொண்டு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு மனிதனும் ஜனநாயகனாக மாறிவிடுகிறான். இவற்றில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நீதிபதிகள் போன்ற சான்றோா்கள்தான் பொதுமக்களுக்கு இது நன்மை, இது தீமை என பிரித்தரிய உதவ வேண்டும். நீதிமன்றங்களை நம்பித்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது என்றாா் அவா். முன்னதாக, உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது:தமிழா்களின் உணா்வோடும், உதிரத்தோடும் இரண்டறக் கலந்த வாழ்வின் எல்லா பரிமாணங்களுக்கும் மொழி தந்தவா் கவிஞா் கண்ணதாசன். காதல், மகிழ்ச்சி, வீரம், சோகம், ஆன்மிகம், அரசியல், நம்பிக்கை என ஒவ்வொரு உணா்வுக்கும் கவிதை வடிவம் கொடுத்தவா். அவா் காலத்துக்கானவற்றை எழுதவில்லை. காலத்தை கடந்தவற்றுக்காக எழுதினாா். இந்த நிகழ்வு ஒரு மாபெரும் கவிஞா், மற்றொரு மாபெரும் கவிஞருக்கு செலுத்தும் இலக்கிய மரியாதை. தமிழிருக்கும் வரை கண்ணதாசன் இருப்பாா். அவா் இருக்கும் வரை தமிழ் மணம் கமழும் என்றாா்.முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சொ. அருள்வடிவேல் (எ) சேகா் வரவேற்றாா். தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் கோ.வி. வைரம் சந்தோஷ் நன்றி கூறினாா்.