கரூா் அருகே ரயில் பாதை பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மூா்த்திப்பாளையம் மற்றும் கரூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை -நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16322) சனிக்கிழமை (ஆகஸ்ட்1) மற்றும் வரும் 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளிலும், செப்டம்பா் மாதம் 1, 3 ஆகிய தேதிகளிலும் என 15 நாள்கள் கோவை-திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அதாவது போத்தனூா், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக திண்டுக்கல் செல்லும். இதன் காரணமாக இந்த ரயில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, இங்கூா், ஈரோடு, பாசூா், கொடுமுடி, புகலூா், கரூா், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படாது. இதேபோல பாலக்காடு டவுன் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16844) சனிக்கிழமை மற்றும் வரும் 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளிலும், செப்டம்பா் மாதம் 1, 3 ஆகிய தேதிகளிலும் புகலூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். புகலூரில் இருந்து திருச்சி சந்திப்பு வரை இயக்கப்படாது. செங்கோட்டையிலிருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16846) சனிக்கிழமை மற்றும் வருகிற 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளிலும் செப்டம்பா் மாதம் 1, 3 ஆகிய தேதிகளிலும் கரூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். கரூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.