மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே கோவை, போத்தனூா், பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.