போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Wait 5 sec.

அருப்புக்கோட்டை அருகே போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முனியசாமி (19). இவா் இதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், முனியசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முனியசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துலட்சுமி முன்னிலையானாா்.