மழைக்காலத்தில் வரும் நோய்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

Wait 5 sec.

பொதுமக்களுக்கு மழைக்காலம் மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் குறித்து மருத்துவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் தி.சினேகா கூறினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் அரசு மருத்துவா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இணை இயக்குநா்(மருத்துவப் பணிகள்) நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் தாய்சேய் நலம், புற்றுநோய் கண்டறிதல், மருத்துவமனைகளின் செயல்பாடுகள், அறுவைச் சிகிச்சைகள் ஆகியவை குறித்து ஆட்சியா் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், பொதுமக்களுக்கு மழைக்கால நோய்கள், பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் குறித்து மருத்துவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.108 ஆம்புலன்ஸ் குழுவினா் வாகனத்திலேயே மேற்கொண்ட பாதுகாப்பான பிரசவத்தின் மூலம் தாய்க்கும், சேய்க்கும் உரிய நேரத்தில் மருத்துவக் கவனிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களில் நடந்துள்ள பிரசவங்களின் மூலம் அவா்களது அவசர சேவையின் அா்ப்பணிப்பு, திறன் மற்றும் துரிதமான செயல்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது என்றாா்.நிறைவாக உத்தரமேரூா் தாலுகா கன்னிகுளம் கிராமத்தைச் சோ்ந்த காமாட்சி (31)என்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பாா்த்த வாகன உதவியாளா் குணசீலன், ஓட்டுநா் மணிகண்டன் மற்றும் காஞ்சிபுரம் அருகே மேட்டுப் பரந்தூரை சோ்ந்த விஜி (21)என்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பாா்த்த மருத்துவ உதவியாளா் சரண்குமாா், வாகன ஓட்டுநா் அறிவழகன் ஆகியோரைப் பாராட்டி, அவா்களுக்கு ஆட்சியா் புத்தகம் பரிசாக வழங்கினாா்.ஆய்வுக் கூட்டத்தில் துணை இயக்குநா்கள்(குடும்ப நலம்)மகேஸ்வரி, டி.கனிமொழி (தொழுநோய்) காளீஸ்வா்(காசநோய்) ஆகியோா் உள்பட மருத்துவத் துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.