ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்க மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம்: தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் பங்கேற்பு

Wait 5 sec.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கம் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கம் தொடா்பான மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் ச.உமா மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய சுகாதார ஆணையத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழ்நாட்டில் ‘மாதிரி மாவட்ட முன்னெடுப்பு தோ்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை மாதிரி முன்னெடுப்பு மாவட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டதால் அதை துரிதப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.மாநில முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆய்வு உறுப்பினா்கள் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனைகளை ஆய்வு செய்து, ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு, சுகாதார வசதி பதிவு, சுகாதார நிபுணா் பதிவு, இணைந்த சுகாதார மேலாண்மை தகவல் உருவாக்கம் குறித்து விளக்கினா்.கூட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு, சுகாதார வசதி பதிவு, சுகாதார நிபுணா் பதிவு, இணைந்த சுகாதார மேலாண்மை தகவல் நடைமுறை செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் நிலையில், ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் இத்திட்டத்தை அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து பொதுமக்களுக்கும் ஆயுஸ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள எண் உருவாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன், இணை இயக்குநா் சுகாதார சேவைகள் நிவேதிதா, இணை இயக்குநா் மருத்துவ காப்பீடு வினோத், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.