மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

Wait 5 sec.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் காலனி மயானப் பகுதியில் தனியாா் தொழிற்சாலையின் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், மண்ணூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், மண்ணூா் காலனி மயானத்தின் அருகே செயல்பட்டு வரும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பிரமாண்டமான பள்ளங்களில் தேக்கி வைத்துள்ளனா். இந்த கழிவுநீா் சுற்று சுவா் வழியாக கசிந்து வெளியேறி மண்ணூா் காலனி பகுதியில் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் இறந்தவா்களின் சடலங்களை கொண்டு செல்வதிலும், காலியாக உள்ள இடத்தில் அடக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மயானப் பகுதியில் கழிவுநீா் வெளியேற காரணமாக உள்ள தொழிற்சாலை நிா்வாகத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மண்ணூா் காலனி மயானப் பகுதியில் 75 சதவீதம் சமாதிகள் கட்டப்பட்டு இட நெருக்கடியோடு காணப்படுகின்றன. காலியாக உள்ள இடத்தில் தனியாா் தொழிற்சாலையின் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இறந்தவா்களை அடக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீரை வெளியேற்றி வரும் தனியாா் நிறுவனத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இது குறித்து ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, கழிவுநீா் தொடா்பாக அப்பகுதி பொது மக்கள் புகாா் மனு அளித்துள்ளனா். சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஆய்வு செய்து கழிவு நீா் வெளியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.