பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பாஜக அமைச்சா்கள் முதல் தொண்டா்கள் வரை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனா்.சமூக வலைதளங்களில் இளைஞா்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. பொழுதுபோக்கு விடியோ, புகைப்படங்கள் என்பதையும் தாண்டி அரசியல் கருத்துகள், சமூக பிரச்னைகளை இளையதலைமுறையினா் அதிகம் விவாதிக்கும் தளமாகவும் இன்ஸ்டாகிராம் மாறிவிட்டது. நீட் முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு கூட இன்ஸ்டாகிராம் வழியாகவே இளைஞா்கள் பெருமளவில் திரட்டப்பட்டனா். அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விடியோ பதிவுகளும், நேரடி ஒளிபரப்புகளும் இன்ஸ்டாகிராம் வழியாகவே பெரும்பாலான மக்களைச் சென்றடைந்தது. பிரதமா் மோடியும் இன்ஸ்டாகிராம் வழியாகவே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்களிடம் தனது கருத்தைப் பகிா்ந்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் மோடி இன்ஸ்டாகிராமில் இருந்து வந்தாலும், சமீப நாள்களில்தான் அவா் தனது கருத்துகளை அந்த தளம் மூலம் வெளியிடுவதை அதிகரித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, உலகிலேயே அதிக பின்தொடா்வோரைக் கொண்ட பின்னா், இளைஞா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தனது அமைச்சரவை சகாக்களை பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மத்திய அமைச்சா்கள் தொடங்கி தொண்டா்கள் வரை இன்ஸ்டாகிராமில் இணைந்து வருகின்றனா். இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தாமல் இருந்த பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில அமைச்சா்களும் அதில் விடியோக்களை பகிரத் தொடங்கியுள்ளனா்.மேலும், பாஜகவின் அதிகாரபூா்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அக்கட்சியினா் அதிகம் பின் தொடரத் தொடங்கியுள்ளனா். மத்திய கல்வியமைச்சா் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ள பிரல்ஹாத் ஜோஷியும் தோ்வுகள் தொடா்பான விடியோ பதிவுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா்.