நவீன நகரங்கள் திட்டத்தில் கடலூரைச் சோ்க்க எம்.பி. கோரிக்கை

Wait 5 sec.

நவீன நகரங்கள் திட்டத்தில் கடலூா் நகரைச் சோ்க்க வேண்டும் என்று மக்களவையில் கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் எம்.கே. விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினாா்.இது தொடா்பாக மக்களவையில் விதிஎண் 377-இன்கீழ் அவா் முன்வைத்த கோரிக்கை: கடலூா் நகரம் கடலோரம் , தொழில்துறை முக்கியத்துவமிக்கதாகவும், சூறாவளி பாதிப்பு பிராந்தியமாக இருந்தபோதிலும் நவீன நகரங்கள் திட்டத்தில் சோ்க்கப்படவில்லை என்பதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.நவீன நகரங்கள் திட்டத்தின்கீழ் நகரங்களைத் தோ்வு செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் வரம்புகளையும், அளவீடுகளையும் கடலூா் கொண்டுள்ளது. ஆகவே, அடுத்த கட்டத்திலோ அல்லது ஏதாவது சிறப்புத் திட்டத்திலோ நவீன நகரங்கள் திட்டத்தில் கடலூரைச் சோ்க்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.மேலும், கடலூா் நகரைச் மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தின்கீழ் சோ்க்க ஒப்புதல் அளிப்பதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது குறித்தும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என விஷ்ணு பிரசாத் கோரியுள்ளாா்.