மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி ரூ. 4,92,752 கோடிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அரசின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது. தலா ரூ.150 கோடிக்கும் அதிக மதிப்பிலான 1,847 திட்டங்களின் அசல் மதிப்பீடு ரூ.35,61,721 கோடியாக இருந்த நிலையில், தற்போது அவற்றின் திருத்தப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 40,54,473 கோடியாக அதிகரித்துள்ளது. 17 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த 1,847 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக இதுவரை ரூ. 21.97 லட்சம் கோடி (திருத்தப்பட்ட மதிப்பில் 54.18 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.மதிப்பீடு வாரியாக...: மொத்த திட்டங்களில், ரூ.1,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய 769 திட்டங்களும், ரூ.150 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையிலான 1,078 திட்டங்களும் (ரூ.5.52 லட்சம் கோடி) அடங்கும்.அமைச்சகங்கள் வாரியாக...: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்சமாக 1,022 திட்டங்களுடன்(55 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. இதன் திருத்தப்பட்ட திட்ட மதிப்பு ரூ. 9.89 லட்சம் கோடியாகும். இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகம் ரூ.8.69 லட்சம் கோடி மதிப்பீட்டில் 255 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல், நிலக்கரி அமைச்சகம் 121 திட்டங்களையும் (ரூ.2.22 லட்சம் கோடி), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 105 திட்டங்களையும் (ரூ.4.33 லட்சம் கோடி), மின்சார அமைச்சகம் 98 திட்டங்களையும் (ரூ.5.71 லட்சம் கோடி) செயல்படுத்துகின்றன.வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 50 திட்டங்களையும் (ரூ.3.65 லட்சம் கோடி), நீா்வளத் துறை 40 திட்டங்களையும் (ரூ.2.04 லட்சம் கோடி), சுகாதாரத் துறை 35 திட்டங்களையும் (ரூ.25,000 கோடி) கொண்டுள்ளன. எஞ்சிய திட்டங்கள் உயா்கல்வி, சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பிற துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.