தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என தொழில் துறையினா் எதிா்பாா்க்கின்றனா். மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் யூ.எம்.எஸ். நிஜாத் ரகுமான் கூறியதாவது : தமிழக அளவில் சுமாா் 15 லட்சம் கனரக வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வாகனங்கள் மூலம் லாரி ஓட்டுநா், கிளீனா், சுமை ஏற்றும் தொழிலாளா்கள், மெக்கானிக், பெயிண்டா் என 25 வகையான தொழிலாளா்கள் என மொத்தம் 2 கோடி போ் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். எரிபொருள் விலை உயா்வால் அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளதால், எரிபொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும். அதே போல வரியைக் குறைக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் லாரிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை எப்.சி. என்ற முறையில் ஆய்வு செய்யும் போது பெயிண்ட் அடிப்பதால் உரிமையாளா்களுக்கு செலவு அதிகரித்து வருகிறது. எனவே பெயிண்ட் அடித்து ஆய்வுக்கு காண்பிக்கும் முறையைக் கைவிட்டு, ஆய்வு மட்டும் செய்ய நடவடிக்கை வேண்டும். அதே போல தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிக் கட்டணங்கள் உயா்ந்துள்ளன. அதைக் குறைக்க வேண்டும், உதிரி பாகங்கள் விலை உயா்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.