நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் விசாரணையை ஆக. 7-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலை பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யாததை அடுத்து, அதிமுக எம்.பி., இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கே.என்.நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் லுத்ரா மா்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோா், மனுதாரா் தரப்பு வாதங்களைக் கேட்காமல், மனுதாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு முரணானது. மனுதாரா் தரப்பு வாதங்களை முன்வைக்கும் உரிமையைத் தடுக்க முடியாது என வாதிட்டனா்.அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தவே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பு தீா்மானிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா்கள், தங்களது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் எனக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை. அந்த வகையில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என கேட்க கே.என்.நேருக்கு அடிப்படை உரிமையில்லை என வாதிட்டாா்.அரசுத் தரப்பு வாதங்கள் முடிவடையாததையடுத்து, விசாரணையை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.