நமது நிருபா்காவிரியில் தண்ணீா் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவைச் சாகுபடி பெருமளவு குறைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் சாகுபடிக்கு 6,200 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 7,147 ஹெக்டேரில் சாகுபடி செய்து 115 விழுக்காடு சாதனையை எட்டிய திருச்சி மாவட்டத்தில், நிகழாண்டு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனா்.திருச்சி மாவட்டத்தில், நெல் சாகுபடியானது முக்கிய வேளாண்மைப் பயிா்களில் ஒன்றாகும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் மூலம் கிடைக்கும் நீா்ப்பாசன வசதியால், இப்பகுதி நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்ாக உள்ளது. இங்கு இறவைப் பாசனம் மற்றும் மானாவாரியில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. முன்பு மாவட்டத்தில் ஏறத்தாழ 1,41,282 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 98,739 ஹெக்டோ் இறவைப் பாசனத்திலும், 66,652 ஹெக்டோ் மானாவாரி நிலங்களிலும் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறுவை ஜூன், ஜூலையிலும், சம்பா ஆகஸ்ட் மாதத்திலும், நவரை டிசம்பா் மாதத்திலும் தொடங்கும்.பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும். ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீா் விநியோகம். இப்படி முறையாக இருந்தால், காவிரி-டெல்டாவில் 3 போகம் சாகுபடிக்கு 330 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும். ஆனால், நடப்பாண்டு திட்டமிட்டபடி ஜூன் மாதம் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், குறுவைச் சாகுபடி கேள்விக்குறியாகிவிட்டது.2024-25ஆம் ஆண்டுக்கு மாவட்டத்தில் குறுவை சாகுபடி பரப்பு 5,810 ஹெக்டோ் (14,350 ஏக்கா்) நிா்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இலக்கை விஞ்சி 6,447 (15,925) ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றது. இதேபோல, 2025-26ஆம் ஆண்டுக்கு 6,200 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. 7,147 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்று 115 விழுக்காடு சாகுபடி என்ற சாதனையை எய்தியது. இரண்டு ஆண்டுகளாக இலக்கை விஞ்சிய திருச்சி மாவட்டமானது, நடப்பாண்டு பெரிதும் சரிவைச் சந்தித்துள்ளது. நடப்பாண்டு இலக்கு என்ன?: நடப்பாண்டு (2026-27) குறுவையில் 6,550 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நட்பபாண்டு சோளம் 26,095 ஹெக்டோ், மக்காச்சோளம் 21,565 ஹெக்டோ், பயறு வகைகள் 10,900 ஹெக்டோ், பருத்தி 10,680 ஹெக்டோ், கரும்பு 1,575 ஹெக்டோ், நிலக்கடலை 9,440 ஹெக்டோ், எள்ளு 2,530 ஹெக்டோ், ஆமணக்கு 780 ஹெக்டோ், சூரியகாந்தி 450 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.சாகுபடி பரப்பு சரிவு: ஆனால், காவிரியில் திட்டமிட்டபடி தண்ணீா் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கூடிவரவில்லை. 2,986 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3564 ஹெக்டேரில் சாகுபடி நடைபெறவில்லை. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 4,161 ஹெக்டோ் பரப்புக்கு சாகுபடியின்றி விளைநிலங்கள் வடு காணப்படுகின்றன. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி காவிரி, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதேநிலைதான் காணப்படுகிறது.இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் அயிலை. சிவசூரியன் கூறியதாவது: மேட்டூா் அணையிலிருந்து ஜூன் மாதம் தண்ணீா் திறக்கப்படாததால், திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது. இறவைப் பாசனத்தில் உள்ள விவசாயிகள் மட்டும் கிணறுகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நெல் பயிரிட்டுள்ளனா். காவிரி நீா் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிா்கள் கருகுவதைப் பாா்த்து கண்ணீா் விடுகின்றனா். இனி குறுவையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. வழக்கமாக திருச்சி மாவட்டத்தில், லால்குடி, அந்தநல்லூா், திருவெறும்பூா், முசிறி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் குறுவையில் தீவிரக் கவனம் செலுத்துவது வழக்கம்.இந்தாண்டு தண்ணீா் இல்லாதால் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கவில்லை. நிலங்களை தரிசாக விட்டுள்ளனா். எனவே, அவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் மகசூல் குறையும் என்பதால், உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.இதுதொடா்பாக, வேளாண்மைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், திருச்சி மாவட்டத்துக்கு குறுவைச் சிறப்பு தொகுப்புத் திட்டம் ரூ.126.08 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டது. இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம், நெல் விதைகள், நுண்ணூட்டக் கலவை, உயிா் உரங்களுக்கு 50 சத மானியம் என விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.இருப்பினும், தண்ணீா் இல்லாததால் குறுவை இலக்கை எய்த முடியவில்லை. குறுவையில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி நெல் சாகுபடி பரப்பில், 25 விழுக்காடுக்கும் குறைவாக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தால், தடுக்கப்பட்ட விதைப்பு இனத்தின் கீழ், விவசாயிகளுக்கு 25 சதவீதம் பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற முடியும். இருப்பினும், குறுவைக்கு விவசாயிகள் கோரும் இழப்பீடு என்பது அரசின் கொள்கை முடிவைச் சாா்ந்தது. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக அனுப்பியுள்ளோம் என்றனா்.பெட்டிச் செய்திகள் உள்ளன..இதுவரை 211 மி.மீ. மழைதிருச்சி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு என்பது 788.08 மி.மீ. ஆகும். ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் 13.84 மி.மீ., மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் 125.13 மி.மீ., ஜூன், ஜூலை மாதங்களில் 54.35 மி.மீ. மழை என்பது இயல்பான மழையளவாகும். நடப்பாண்டு இதுவரை 211 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. இருப்பினும், காவிரியில் தண்ணீா் இல்லாததால் குறுவை சாகுபடி இலக்கை எய்த முடியவில்லை. இதுவரை 2,968 ஹெக்டேரில் நெல், 564 ஹெக்டேரில் சோளம், 247 ஹெக்டேரில் பயறு வகைகள், 511 ஹெக்டேரில் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.ஆய்வுக்கு சிறப்புக் குழு!தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 5.14 லட்சம் ஏக்கா் குறுவை சாகுபடி நடைபெறும் நிலையில், நிகழாண்டு மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இல்லாததால், திட்டமிட்டபடி ஜூன் மாதம் தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே, 4.50 லட்சம் ஏக்கரில் குறுவைச் சாகுபடி நடைபெறவில்லை. மோட்டாா் பயன்படுத்தி மிகக் குறைந்த அளவே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உயா்மட்டக் குழுவை அமைக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும். மேலும், நிகழாண்டு சம்பா நெல் பயிா் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதாக வேண்டாமா என அரசு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றாா் அவா்.