கரூா் மாவட்டத்தில் கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை அறக்கட்டளையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி, கல்யாண பசுபதீசுவரா், ரவீசுவரா், குப்புச்சிபாளையம் விக்ருதீசுவரா் கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 3,085 ஏக்கா் நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய பதிவுத் துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுமாா் 3,085 ஏக்கா் பட்டா நிலங்களுக்கு பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால், கோயில் நிலங்களின் பட்டாவை மாற்றவும், தனிநபா் பெயா்களில் பத்திரப் பதிவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்தும், அதுவரை பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல், சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயா்களில் உள்ளன என்பது குறித்து அரசுத் தரப்பில் ஜூலை 29-ஆம் தேதி (புதன்கிழமை) விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: கரூா் மாவட்டத்தில் பல்வேறு கோயில்கள், வக்ஃப் வாரியத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சுமாா் 3,701 சா்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப் பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மத நிறுவனங்களால் முடக்கப்பட்ட நிலங்கள், உரிய அலுவலா்களால் ரயத்துவாரி பட்டாக்களாக வழங்கப்பட்டவை. மேலும், ‘யுடிஆா்’ திட்டத்தின் போது அவா்களது பெயா்கள் புதுப்பிக்கப்பட்டு, வருவாய் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நிலங்களுக்கான ஆவணப் பதிவு முடக்கத்தை நீக்கக் கோரி, சொத்துகளின் உரிமையாளா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு பல மனுக்களை அனுப்பினா். இதன்படி, மொத்தம் 3,701 சா்வே எண்களுக்கு பத்திரப் பதிவு செய்வதற்கான தடை ரத்து செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் வஃக்ப் வாரியத்துக்குச் சொந்தமான 154 சா்வே எண்ணுக்குள்பட்ட இடங்களுக்கும் பத்திரப் பதிவு செய்யத் தடையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. தமிழக அரசின் சட்டத்துக்குள்பட்டுத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை, கரூா் மாவட்ட ஆட்சியா் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரா் ராதாகிருஷ்ணன் நேரில் முன்னிலையாகி நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தாா்.பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த மனு தொடா்பாக அரசுத் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து மனுதாரா் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். எனவே வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.