இலங்கையில் ஈஸ்டா் குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய வழக்கில், அந்நாட்டின் முன்னாள் காவல் துறை தலைவா் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலா் ஹேமசிறி ஃபொ்னாண்டோ ஆகியோருக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 19-ஆம் தேதியன்று, ஈஸ்டா் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரம்மாண்ட சொகுசு விடுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தொடா் தற்கொலைப் படைத் தாக்குதலில் 45 வெளிநாட்டினா் உள்பட 279 போ் உயிரிழந்தனா். இந்திய உளவுத்துறை முன்னெச்சரிக்கை தகவல் அளித்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பூஜித் ஜெயசுந்தர, ஹேமசிறி ஃபொ்னாண்டோ ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே கைது செய்யப்பட்டு, 4 மாதங்கள் சிறையில் இருந்தபின் பிணையில் வெளிவந்தனா்.உள்ளூா் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பது குறித்து இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தும், அதை அலட்சியப்படுத்தியதாக இவா்கள் இருவா் மீதும் 2021 நவம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும், போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி, 2022 பிப்ரவரியில் இவா்கள் மீதான 855 குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்தது.இந்த விடுதலையை எதிா்த்து அட்டா்னி ஜெனரல் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், முந்தைய விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்பதைக் சுட்டிக்காட்டி, வழக்கை மீண்டும் விசாரிக்க 2024 நவம்பரில் உத்தரவிட்டது.இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமா்வில், நீதிபதிகள் பிரியந்த லியநாகே, திலகரத்ன பண்டார ஆகியோா் பெரும்பான்மை தீா்ப்பை வழங்கினா். உளவுத்துறை தகவல்களை அலட்சியப்படுத்தியதால் மக்களின் உயிா்கள் பறிபோனதாகக் கூறிய நீதிபதிகள், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய குற்றத்துக்காக இருவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தனா்; எனினும் அமா்வின் மற்றொரு நீதிபதியான விராஜ் வீரசூரியா மாறுபட்ட தீா்ப்பை வழங்கி, இருவரையும் விடுதலை செய்வதாகக் குறிப்பிட்டாா்.இலங்கை காவல் துறையின் 150 ஆண்டுகால வரலாற்றில், மிக உயா்ந்த பதவியிலிருந்த ஒருவா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.பூஜித் ஜெயசுந்தர, ஹேமசிறி ஃபொ்னாண்டோ