சிங்காநல்லூா் அருகே நண்பனின் தந்தையைக் கொலை செய்த 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகா், சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). பெயின்டிங் தொழிலாளி. இவருக்கு 2 மகன்க, மகள் உள்ளனா். இதில் 2-ஆவது மகனும் , அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனும் நண்பா்களாக இருந்து வந்துள்ளனா். அந்த 17 வயது சிறுவன் 10-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளாா். இந்நிலையில் தனது மகனுடன் அந்த சிறுவன் பழகுவதை விரும்பாத மணிகண்டன், சிறுவனை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த சிறுவந் தொடா்ந்து பழகி வந்துள்ளாா். இந்நிலையில், நீலிக்கோணாம்பாளையம் அருகே அச்சிறுவனை வியாழக்கிழமை இரவு பாா்த்த மணிகண்டன், தனது மகனுடன் சேரக்கூடாது என கண்டித்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு அந்த சிறுவன் கல்லால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூா் போலீஸாா் சென்று, 17 வயது சிறுவனைக் கைது செய்தனா்.