சென்னை மாநகராட்சிக்கு ரூ.15.91 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக ஜவுளிக் கடைக்கு அலுவலா்கள் புதன்கிழமை சீலிட்டு பூட்டினா். சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். ஏற்கெனவே மாநகராட்சிக்கு கடன் நிலுவை ரூ.3,860 கோடி வரை உள்ளதாகவும், அதற்காக வட்டி அதிகளவில் கட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரிகளும் அதிகளவில் நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால், வரி செலுத்தாதவா்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில் உஸ்மான் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ.15.91 லட்சம் சொத்துவரி பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவா்களிடம் சொத்து வரியைச் செலுத்த பலமுறை அலுவலா்கள் கோரியும் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கடைக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை சீலிட்டு மூடினா்.