டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக, திமுக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி மீது தமிழக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயா்ந்தாலும், வருவாய் குறைந்தது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாகப் புகாா் எழுந்தது.இந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின்பேரில், தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அத்துறையின் அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம்,செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலரும், கரூரைச் சோ்ந்தவருமான மூலனூா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் சென்னை, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பா்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.TASMAC irregularities case! Senthil Balaji files petition seeking anticipatory bail!டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு: 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை