திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரௌடிகள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூபதி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, காஜாபேட்டையில் தனியாா் பள்ளி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை முதலியாா் சத்திரம் ஆலம் வீதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான எஸ். அல்லா பிச்சை (41) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 62 ஆயிரம் மதிப்பிலான 2,017 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் ரூ.710 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதேபோல, தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரெட்டை வாய்க்கால் 3-ஆவது குறுக்குத் தெருவில் புதன்கிழமை இரவு போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த தில்லைநகா் வடவூரைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சி. பிரசாந்த் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.1,600 மதிப்பிலான 8 போதை மாத்திரைகள், ரூ. 600 ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.