வினாத் தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026 நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.முன்னதாக, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில் மற்றும் வங்கி நியமனத் தோ்வுகள், தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகள் உள்ளிட்ட பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தோ்வு வினாத் தாள் கசிவு அல்லது பிற முறைகேடுகளில் ஈடுபடும் நபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.