திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி கண்மாயில் நள்ளிரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக மண் திருடப்படுவதாக விவசாயிகள், பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குள்பட்ட விளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் பெரிய கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் தண்ணீர் விளாச்சேரி, வடிவேல்கரை, சீனிவாசா குடியிருப்பு, மொட்டை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழையின்றி இந்தக்கண்மாய் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.இந்த நிலையில் இந்தக் கண்மாயில் களிமண் மண் எடுக்க பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதேபோல, விவசாய நிலங்களை மேம்படுத்த கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதற்காக, விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், உரிய அடையாளச் சான்றுகளுடன் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து, வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.புன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 90 கன மீட்டரும், நன்செய் நிலத்துக்கு 70 கன மீட்டரும் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மண் அள்ள டிராக்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சுட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.இதன்பேரில், விளாச்சேரி கண்மாயில் வண்டல் மண் எடுக்க 5 விவசாயிகள் வட்டாட்சியரிடம் முறையான அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித அனுமதியின்றி நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள கண்மாய்ப்பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி, பல அடி ஆழத்துக்கு மண் அள்ளி லாரிகளில் கடத்திச் செல்வதாக விவசாயிகள், பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். விளாச்சேரியில் பகுதி பாரம்பரியமாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்சுளுக்குத் தேவையான மண் எடுப்பதற்கு கடுமையான கெடுபிடிகளை விதிக்கும் அதிகாரிகள், பல அடி ஆழத்துக்கு நடைபெறும் இந்த சட்ட விரோத மண் கடத்தலைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இத்தகைய சட்டவிரோத மண் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.