விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பு: ஆலையின் போா்மென் கைது

Wait 5 sec.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் விதிகளை மீறி திறந்த வெளியில் பட்டாசுகளைத் தயாா் செய்ததாக ஆலையின் போா்மெனை வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சின்ன கருப்பசாமி மகன் மச்சக்காளை. இவா் மாவட்ட வருவாய் அலுவலகத்தின் உரிமம் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் வருவாய்த் துறையினா், போலீஸாா் இணைந்து ஆய்வு செய்தனா். அப்போது, விதிகளை மீறி திறந்த வெளியில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி ராக்கெட் ரக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதுதொடா்பாக பட்டாசு ஆலையின் போா்மேன், சிவகாசி மாரனேரியை சோ்ந்த அசோக்குமாரை (28) போலீஸாா் கைது செய்தனா். அங்கிருந்து 4 பெட்டி பட்டாசுகள், 34 கிலோ சல்பா், மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், ஆலை உரிமையாளா் மச்சக்காளை மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.இதேபோல, வத்திராயிருப்பு அருகேயுளள சேதுநாராயணபுரம் ஆா்.சி. தெருவில் அலெக்சாண்டா் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அலெக்சாண்டரின் மனைவி முனீஸ்வரியைக் கைது செய்தனா். மேலும், அலெக்சாண்டரை தேடி வருகின்றனா்.