நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

Wait 5 sec.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் சுருக்கத்தை இங்கே தொகுத்துள்ளோம். மக்களவையில்...1) தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலை என்ன?மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே அளித்த எழுத்துபூர்வ பதிலில், "தமிழகத்தில் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பிணையில்லாக் கடன் வசதியை வழங்க "கடன் உத்தரவாதத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்கீழ் பிணைத் தொகையோ அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதமோ இன்றி தொழிலாளர்களுக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், சிறு தொழில்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நிலையான கடன் உத்தரவாதக் கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு 0.37 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2) "அடல் புஜல்' திட்ட அமலாக்கம் எப்படி உள்ளது? டி. மலையரசனின் (திமுக) கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் செüதரி அளித்த பதிலில், "அடல் புஜல் திட்டம் என்பது ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 8,203 கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட கால அளவிலான திட்டமாகும். சமூகப் பங்களிப்புடன் நிலத்தடி நீரை வெற்றிகரமாக மேலாண்மை செய்து, இத்திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3) கிழக்குக் கடற்கரை ரயில்வே திட்ட நிலவரம் என்ன?ஆர். சுதா (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், "சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஏற்கெனவே திருச்சி, மதுரை வழியே ரயில் இணைப்பு உள்ளது. புதுச்சேரி வழியிலான சென்னை - கடலூர் (179 கி.மீ.) புதிய ரயில் பாதை திட்டம், சீரமைப்புப் பிரச்சினைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி (36 கி.மீ.) புதிய வழித்தடப் பணியில் 108 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பெரும்பான்மையான பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.4) தமிழக விமான நிலையங்களின் விரிவாக்க நிலை என்ன?டாக்டர் கலாநிதி வீராசாமி (திமுக) எழுப்பிய கேள்விக்கு, விமான போக்குவரத்து துறை இணை யமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த பதிலில், "சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,467 கோடியில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கூடுதல் மழைநீர் வடிகால் மற்றும் முதலாவது முனைய சீரமைப்புப் பணிகளும் அடங்கும். திருச்சி விமான நிலையத்தில் ரூ. 80.17 கோடி மதிப்பீட்டில் புதிய விமான கட்டுப்பாட்டு மையத்தின் கோபுரம் மற்றும் தொழில்நுட்ப வளாகப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை விமான நிலையத்தில் புதிதாகப் பெறப்பட்ட நிலத்தில் எல்லைச் சுவர் அமைத்தல் மற்றும் தற்போதைய முனையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூ. 65 கோடிக்கும் அதிகமான செலவில் தொடங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில்... 1) மேக்கேதாட்டு அணைத் திட்டம் மீதான மத்திய அரசின் ஒப்புதல் நிலை என்ன?டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பாமக) எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்துள்ள பதிலில், "மேக்கேதாட்டு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஜல் சக்தி அமைச்சகமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. காவிரி நதி மாநிலங்களுக்கு இடையேயான நதி என்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், வனப் பாதுகாப்புச் சட்டத்தில் இத்திட்டத்திற்கு வன அனுமதி கோரும் எந்தவொரு முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2) மகேந்திரகிரியில் செயற்கைக்கோள் ஏவுதளம் தொடங்கப்படுமா? ஐ.எஸ். இன்பதுரை (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், "திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் தற்போதைய சூழலில் அரசிடம் பரிசீலனையில் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.3) உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ. ஆராய்ச்சி மேம்படுத்தப்படுகிறதா? கே.ஆர்.என். ராஜேஷ்குமாரின் (திமுக) கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், "நீதி ஆயோக்கின் ’அனைவருக்குமான ஏ.ஐ.' கொள்கையின்படி, கணக்கீட்டு உயிரியல், மரபியல், மருத்துவ இமேஜிங் மற்றும் உயிரி தரவு அறிவியல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த ஆராய்ச்சிகளை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இந்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.