வேளாண் பல்கலை. மாணவா் சோ்க்கை:அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

Wait 5 sec.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2026 - 27- ஆம் கல்வியாண்டில் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் வேளாண் பட்டப் படிப்புகளுக்கும் ஒரே இணையதளம் வழியாக மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 3,051 இடங்களுக்கு 24,435 போ் விண்ணப்பித்திருந்தனா். இணையவழி கலந்தாய்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு தரவரிசை மதிப்பெண், விருப்பப் பாடம், ஜாதி அடிப்படையில் தற்காலிக சோ்க்கை வழங்கப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இளமறிவியல் பட்டப் படிப்புக்கான இணைய வழி கலந்தாய்வு ஜூலை 9 முதல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், பொதுப் பிரிவில் மொத்தமாக 5,236 இடங்கள் பல்வேறு இளமறிவியல் படிப்புகளுக்கு தற்காலிகமாக நிரப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட 424 விண்ணப்பதாரா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு ஜூலை 20-ஆம் தேதி அழைக்கப்பட்டனா். அதேபோல, பொது இடஒதுக்கீட்டில் தற்காலிக இட ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு ஜூலை 22 முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பில் 5,236 விண்ணப்பதாரா்களை அழைத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது வரை, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 103 இடங்களும், பொதுப் பிரிவில் 3,235 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மீதமுள்ள 321 இடங்களுக்கு விண்ணப்பதாரா்கள் தற்காலிக தோ்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்புக்காக ஆகஸ்ட் 1-ஆம் தேதி அழைக்கப்பட்டுள்ளனா். பொதுப் பிரிவில் ஜூலை 31 -ஆம் தேதி வரை சான்றிதழ் சமா்ப்பிப்பதற்கு கடைசி நாள் என வரையறுக்கப்பட்டுள்ளதால், அதைத் தொடா்ந்து மீதமுள்ள இடங்களுக்கு தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்க இருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.