முன்மாதிரி முனைப்பு!

Wait 5 sec.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமோ, முதல்வரோ முன்னெடுக்காத முயற்சியைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்திருக்கிறார். நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக அடுத்த வாரம் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பிறப்பித்திருக்கும் உத்தரவு, ஏனைய மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று.2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைக் குறைந்தபட்சம் 50% குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கும் செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு. எந்த அளவுக்கு முதல்வர் நாட்டு நடப்பு குறித்த புரிதலுடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் செயல்பாடு.சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை உருவாக்குவது; சாலை விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களைக் கண்டறிந்து தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, மாற்றங்களை உறுதிப்படுத்துவது; விபத்துகள் அதிகமாக நிகழும் நெடுஞ்சாலைப் பகுதிகளில், அதற்கென்று சிறப்பு மருத்துவமனைகளை அமைப்பது; எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாடு முழுவதும் முக்கிய மேம்பாலங்கள், பாலங்களின் உறுதித்தன்மையை ஆராயக் கட்டமைப்புத் தணிக்கை மேற்கொள்வது - இவையெல்லாம் முதல்வர் முன்மொழிந்திருக்கும் செயல் திட்டத்தின் அம்சங்கள்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டம் இது. ஒருபுறம், மோட்டார் வாகன உற்பத்தியும், விற்பனையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இன்னொரு புறம், நமது சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், அந்த சாலைகள் பாதுகாப்பானவையாக இருக்கின்றனவா, தரமானவையாக இருக்கின்றனவா என்ற கேள்வி எழும்போது, நெஞ்சு நிமிர்த்த முடிவதில்லை.நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்ட தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கடந்த 2020 முதல் 2024 வரையிலான ஐந்தாண்டுகளில், சாலைகளில் காணப்படும் குண்டு, குழிகளால் ஏற்பட்டிருக்கும் விபத்து மரணங்களின் எண்ணிக்கை 53% அதிகரித்திருக்கிறது. இதை வெறும் புள்ளிவிவரமாகக் கடந்துபோகக் கூடாது. இது நமது நிர்வாகத்தின் செயல்முறைத் தோல்வி (சிஸ்டமிக் ஃபெய்லியர்) என்பதை உணர வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய சாலைகளில் வெறும் 2% அளவுதான் என்றாலும்கூட, மொத்த சாலை விபத்துகளில் 30% நெடுஞ்சாலைகளில்தான் நிகழ்கின்றன. சாலைகள் மட்டுமல்ல, சாலைகள் மீது போடப்பட்டிருக்கும் பாலங்களும், மேம்பாலங்களும், ரயில்வே பாலங்களும்கூடப் பாதுகாப்பானவையாக இல்லை என்பதைத்தான் பல நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பாலங்கள் பாதுகாப்பாக இருப்பதை அவ்வப்போது கண்காணிப்புக்கு உட்படுத்துவதில் நகராட்சி, சாலை மேம்பாட்டுத் துறைகள் அக்கறை காட்டுவதில்லை.அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கட்டி முடிக்கப்பட்டு, கோலாகலமாகத் திறப்பு விழா நடத்தப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி 16-ஆவது நாள் இடிந்து விழுந்திருக்கிறது. இன்னொரு நாடாக இருந்திருந்தால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கேள்விக்கு உள்ளாகி இருப்பார்கள்; மக்கள் மன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் தங்களது தவறுக்கு வருந்தி இருப்பார்கள். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. மழைப் பொழிவு அதிகரித்தது என்று காரணம் கூறப்பட்டு கடந்து போகப்பட்டிருக்கிறது.முந்தைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலும், அதற்கு முன்பு நமது அரசர்கள், முகலாய சுல்தான்கள் ஆட்சியிலும் கட்டப்பட்ட பல பாலங்கள் இப்போதும் திடமாகவும், பயன்பாட்டிலும் இருக்கும்போது, நவீன தொழில்நுட்ப வசதிகள், கட்டுமானப் பொருள்களுடன் பொறியியல் பட்டதாரிகளால் கட்டப்படும் பாலங்கள் இடிந்து விழுவதும், சாலைகள் பருவமழை வந்தால் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்று ஏன் யாருக்கும் தோன்றுவதில்லை?உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் கோமதி ஆற்றின் மீது அக்பர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இப்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. பிரயாக்ராஜில் யமுனை நதிமீது 1865-இல் கட்டப்பட்ட ரயில் பாலம் இப்போதும் எந்தவிதப் பலவீனமும் இல்லாமல், நல்ல கட்டுமானத்தின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. ஆனால், சுதந்திர இந்தியாவில் கட்டப்படும் பாலங்களும், சாலைகளும் தரமற்றவையாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.சாலைகள் பழுதாகும்போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது; வாகனங்கள் பழுதுபடுகின்றன; விபத்துகள் நேர்கின்றன; பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு பாலம் சரிந்து விழும்போதும், சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கும்போதும் அதற்குப் பின்னால் அரசியல்வாதி-ஒப்பந்ததாரர்-அதிகாரிகள் என்கிற முத்தரப்பு ஊழல் உயர்ந்து நிற்கிறது. அதற்கு எதிராகச் சாட்டையை சுழற்ற முற்பட்டிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக வேண்டும்.