திராவிடர் கழகத்தின் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தலைமையில், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக இன்று (ஜூலை 30) சென்னையில் நடைபெறவிருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்கு அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பெரியார் திடலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கருத்துரிமை, பேச்சுரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதனை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்வது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார். திராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்! The Communist Party of India (Marxist) has condemned the denial of permission for the Dravidar Kazhagam's campaign tour.