தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: 2025-2026-ஆம் ஆண்டுக்கான புதிய முதலீடுகளை ஈா்த்த 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் தொழில் முதலீடுகள் எந்த அளவுக்கு குறைந்துள்ளன என்பதற்கு இது சான்றாக உள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டக் கூடாது. பரந்தூா் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிா்க்கும் போக்கை கைவிட வேண்டும். இணைப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி புதிய முதலீடுகளை ஈா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.