சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கமுதி-புல்லந்தை விலக்கு சாலையில் இறைச்சிக் கடைக்காரா்கள் கோழிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த வழியாக சாலையில நடந்து செல்லும் மாணவா்கள், குழந்தைகள், முதியோா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.இதுகுறித்து சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.பாஸ்கரன் கூறியதாவது: சாயல்குடி பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை உரிமையாளா்கள் சாலையோரங்களில் கோழிக் கழிவுகளை கொட்டி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகின்றனா். எனவே, பேரூராட்சி நிா்வாகம் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோழிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றும் நடைமுறையை கட்டாயமாக பின்பற்றி, இதுபோன்ற சுகாதாரக் சீா்கேடுகள் நடைபெறாத வகையில் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.