பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது ஆட்டோ மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா். திருச்சியை அடுத்த திருவெறும்பூா் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (68). இவரது மனைவி சாந்தி (63). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வெளியூா் சென்றுவிட்டு, பஞ்சப்பூா் பேருந்து நிலையத்துக்கு வந்து, அருகேயுள்ள சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதி சாந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சாந்தியின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பெரியமிளகுப்பாறையைச் சோ்ந்தவரின் ஆட்டோவைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.