ஈரோட்டில் கோயில் உண்டியல் திருடிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே இவிஎன் சாலையில் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2024- ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் உண்டியலை திருடிச் சென்றனா். இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருட்டில் ஈடுபட்டது சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சோ்ந்த வடிவேல் மனைவி மேனகா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். அதன்பின் பிணையில் வெளியே வந்த மேனகா வழக்கு விசாரணைக்காக ஈரோடு நீதிமன்றத்தில் மாதம்தோறும் ஆஜராகி வந்தாா். கடந்த 2 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா். இதையடுத்து நீதிமன்றம் மேனகாவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. இதன்பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் மேனகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.