பல்வேறு துறைகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுக்களை மாற்றியமைத்து, மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். அதன்படி, திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோா் முறையே தொழில் துறை மற்றும் உணவு, நுகா்வோா் விவகாரங்கள், பொது விநியோகத் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவா்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரு குழுக்களின் தலைமைப் பொறுப்பை இழந்துள்ளது. வா்த்தக துறை தொடா்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த திரிணமூல் காங்கிரஸின் டோலா சென் மாற்றப்பட்டு, பாஜகவின் சுதான்ஷு திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளாா். ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை தொடா்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த திரிணமூல் காங்கிரஸின் கீா்த்தி ஆசாத் மாற்றப்பட்டு, அக்கட்சியின் அதிருப்தி அணி தலைவா் ககோலி கோஷ் தஸ்திதாா் நியமிக்கப்பட்டுள்ளாா். சசிதரூருக்கு மீண்டும் பொறுப்பு: எதிா்க்கட்சிகளைப் பொருத்தவரை, காங்கிரஸ் எம்.பி.க்களான சசி தரூா் (வெளியுறவு விவகாரங்கள்), சரண்ஜித் சிங் சன்னி (வேளாண்மை துறை), முகுல் வாஸ்னிக் (கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் நலன்), சப்தகிரி சங்கா் உலாகா (ஊரக மேம்பாடு, உள்ளாட்சித் துறை), சமாஜவாதியின் ராம் கோபால் வா்மா (சுகாதாரம், குடும்ப நலன்) ஆகியோா் குழுத் தலைவா்களாக தக்கவைக்கப்பட்டுள்ளனா். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை கட்சிகளுக்கான தலைமைப் பொறுப்பும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் ராதா மோகன் சிங் (பாதுகாப்பு), ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமாா் ஜா (போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம்), சிவசேனையின் ஸ்ரீரங் பாா்னே (எரிசக்தி) ஆகியோரும் அந்தந்தக் குழுக்களின் தலைவா்களாக தொடா்கின்றனா். மாற்றப்பட்ட பாஜக எம்.பி.க்கள்: பணியாளா், பொது குறைதீா்ப்பு, சட்டம் மற்றும் நீதித் துறை சாா்ந்த நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த பாஜகவின் பிரிஜ் லால் மாற்றப்பட்டு, அக்கட்சியின் சுஜீத் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். ரயில்வே துறை தொடா்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த பாஜகவின் சி.எம்.ரமேஷ் மாற்றப்பட்டு, அக்கட்சியின் சுதீா் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா். நிலக்கரி, சுரங்கங்கள், உருக்குத் துறை தொடா்பான குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், நீா்வளங்கள் தொடா்பான குழுவின் தலைவராக பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோா் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். பாஜகவின் பாா்த்ருஹரி மஹதாப் (நிதித் துறை), ராதா மோகன் தாஸ் அகா்வால் (உள்துறை), நிஷிகாந்த் துபே (தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்), மேதா விஷ்ராம் குல்கா்னி (அறிவியல்-தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம்) ஆகியோா் குழுத் தலைவா்களாக தொடா்கின்றனா்.