ஆசியன் கவுன்சில் மூலமாக கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 6 லட்சம் மோசடி செய்த தனியாா் கோச்சிங் மையத்தின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காரைக்கால் லத்தீப் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹாஜா ஜெய்னுதீன். தனது மகள் உம்மூா் ரிஸ்வானா. 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு , வீட்டில் இருந்து நேரடியாக 12-ஆம் வகுப்பு படிப்பதற்காக, காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ள தனியாா் கோச்சிங் மையத்தின் உரிமையாளா் புதுச்சேரியை சோ்ந்த காா்த்திகேயன் (49) என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அணுகியுள்ளாா் ஹாஜா ஜெ‘ய்னுதீன்.படிப்பு செலவிற்காக ரூ. 50 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியதால், அந்த தொகையை ரொக்கமாக கொடுத்துள்ளாா். மாணவி பிரெஞ்சு படித்திருந்தால், ஆசியன் கவுன்சில் மூலம் ரூ. 15 லட்சம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக காா்த்திகேயன் கூறியுள்ளாா். பின்னா், ஆசியன் கவுன்சில் மெயில் முகவரியிலிருந்து 15 ஆவணங்களை அனுப்புமாறு, மாணவிக்கு தகவல் வந்துள்ளது. அவா் ஆவணங்களை அனுப்பியுள்ளாா். தொடா்ந்து சுவிட்சா்லாந்து டன்ஸ்டா் பல்கலைக்கழகம் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்துள்ளது. அதில் ஆசியன் பல்கலைக்கழகம் ரூ. 15 லட்சம் செலுத்திவிட்டதாகவும், கல்வி உதவித் தொகை தயாராக இருப்பதாகவும், பணம் விடுவிப்புக்காக தொகை செலுத்தவேண்டும் என கூறப்பட்டதால், கடந்த 22.10.2025 அன்று ரூ. 2 லட்சத்தை காா்த்திகேயனிடம் கொடுத்துள்ளாா். மேலும் பல கட்டங்களில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தினமும் படிப்பு சம்பந்தமாக கட்டுரைகள், விடியோக்களை காா்த்திகேயேன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மாணவி அனுப்பிவந்துள்ளாா். ஒரு கட்டத்தில் ரூ. 50 ஆயிரத்தை நிா்பந்தமாக காா்த்திகேயன் கேட்டாராம். கல்வி உதவித்தொகை வரவில்லை என மாணவி கேட்டபோது, அவா் அலட்சியமாக பதில் கூறியுள்ளாா்.சந்தேகமடைந்த மாணவி சுவிட்சா்லாந்து டன்ஸ்டா் பல்கலைக்கழகத்தை தொடா்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான மெயில் எதையும் தாங்கள் அனுப்பவில்லை என பதில் வந்துள்ளது.சுவிட்சா்லாந்து டன்ஸ்டா் பல்கலைக்கழகத்தின் இமெயில் முகவரியை போலியாக தயாரித்து, தன்மை நம்ப வைத்து காா்த்திகேயன் ரூ. 6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக மாணவி காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனா்.