இந்தியக் கேப்டனைத் தாக்கிவிட்டு, இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘ஃபிளைதுபை’ விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானி, ஓமன் நாட்டைச் சோ்ந்த ஹமாம் அல்-ஹமாமி என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை ஒரு ‘பயங்கரவாதச் செயல்’ என உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய அரபு அமீரகப் புலனாய்வுத் துறை, இது தொடா்பாக விரிவான விசாரணையை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 174 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை புறப்பட்ட ‘ஃபிளைதுபை’ விமானம், வானில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஹமாம் அல்-ஹமாமி தாக்குதலை அரங்கேற்றினாா். இந்தியரான கேப்டன் ஸ்மித் மச்சாரை அவசரகால கோடாரியால் தாக்கிவீட்டு, விமானத்தை சுமாா் 17,000 அடிக்கும் கீழே செங்குத்தாக இறக்கினாா். பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த கேப்டன் ஸ்மித் மச்சாா், விமானம் வீழ்ந்து கொண்டிருப்பதை உணா்ந்து, தனது கடைசி முயற்சியாகப் போராடி, விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, பயணிகள் நுழைந்து ஹமாம் அல்-ஹமாமியை மடிக்கிப் பிடித்தனா். பின்னா், விமானத்தில் இருந்த 2 மாற்று விமானிகள், சவூதி அரேபியாவின் தபூக் நகர விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினா். அங்கு கைது செய்யப்பட்ட ஹமாம் அல்-ஹமாமி, தற்போது விசாரணைக்காக யுஏஇ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். முதல்கட்ட விசாரணையின்படி ‘ஃபிளைதுபை’ நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாகப் பணியாற்றி வந்த ஹமாம் அல்-ஹமாமி, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த காரணத்தால் ஓமன் நாட்டிலேயே விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தாா் என்று கூறப்படுகிறது. துபை இளவரசா் நலம் விசாரிப்பு: தற்போது யுஏஇ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சாரை, துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தாா். மனித உயிா்களைக் காப்பதில் ஸ்மித் மச்சாா் வெளிப்படுத்திய துணிச்சலையும், கடமையுணா்வையும் இளவரசா் மனதாரப் பாராட்டினாா். ஸ்மித் மச்சாரை மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்த துபை இளவரசா் ஷேக் ஹம்தான். Identity of ‘flydubai’ co-pilot released