கடலூா் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தும், தியாகவல்லி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்தும் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காந்தி ஜெயந்தியையொட்டி, தியாகவல்லி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிப்காட் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றுவதற்காக ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் கூட்டத்தில் பங்கேற்க வந்தனா்.ஆனால், கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளா்களும், வட்டார வளா்ச்சித் துறை அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. ஊராட்சி எழுத்தா் மட்டும் கூட்ட இடத்தில் இருந்துள்ளாா். இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து கூட்டத்தைப் புறக்கணித்து, அங்கேயே தரையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்துக்காக தங்களது விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதுதொடா்பாக கிராம மக்களின் எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் கிராமசபையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.மேலும், கிராமசபைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்றும், அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். இரவு வரை இவா்களது போராட்டம் தொடா்ந்தது.தியாகவல்லி, குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.