தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 14 வைணவ கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.பக்தர்கள் இதனை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நவக்கிரக கோவில்களுக்கு ஆன்மீக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நவகிரக ஆன்மீக சுற்றுலா பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று வைணவ திவ்ய தேச ஆன்மீக சுற்றுலா பேருந்து துவக்கி வைக்கப்பட்டது.வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் படியாக ஆன்மீக சுற்றுலா பேருந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது.வைணவ ஆன்மீக சுற்றுலா பேருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில், திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவில், திருமணிக்கூடம் வரதராஜர் பெருமாள் கோவில், திரு இந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி கோவில், சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி உள்ளிட்ட 14 வைணவ தலங்களுக்கு சென்று தரிசனம் செய்திடும் வகையில் இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.14 வைணவ ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீக சுற்றுலா சேவைக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் 1350 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.