அண்மையில் காலமான மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டுவதென மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா (90) கடந்த செப். 11-ஆம் தேதி காலமானாா். இவரது உடல், அரசு மரியாதையுடன் செப். 12-ஆம் தேதி மதுரையில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இவா் வசித்த மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள விசுவாசபுரி தெருவுக்கு சாலமன் பாப்பையாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழறிஞா்கள் கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை தினமணி நாளிதழும் வலியுறுத்தியது. இந்த நிலையில், கடந்த செப். 30-ஆம் தேதி நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தனித் தீா்மானத்தை முன்மொழித்தாா். இந்தத் தீா்மானம் மாமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஒரு வாரத்தில் பெயா்ப் பலகை...இதுதொடா்பாக மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தெரிவித்ததாவது: சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவா் பெயரைச் சூட்டும் தீா்மானம் மாமன்ற உறுப்பினா்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சி பொறியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவா் வசித்த தெருவில் சாலமன் பாப்பையா தெரு என்ற பெயா்ப் பலகை ஒரு வார காலத்தில் அமைக்கப்படும் என்றாா்.