பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் பணியாற்றி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்லடம் போலீஸாா் அப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் முகமது அன்வா் (26), முகமது நூா்கான் (32), முகமது சோபன் மடோப்பா் (48), முகமது எமோன்மியா (25) என்பதும், நுழைவு இசைவு (விசா) இன்றி சட்டவிரோதமாக தங்கி, பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.