சீரான குடிநீா் வழங்கக் கோரி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

Wait 5 sec.

கோவை மாவட்டம், சூலூா் அருகே அப்பநாயக்கன்பட்டியில் சீரான அளவில் குடிநீா் வழங்கக் கோரி, மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். சூலூரை அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிப்பதாக மக்கள் கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, வருவாய்த் துறை மற்றும் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், அப்பநாயக்கன்பட்டி கிராமத்துக்கு கூடுதலாக 40 ஆயிரம் லிட்டா் குடிநீா் அளித்து, 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. ஆயினும், தொடா்ந்து குடிநீா் விநியோகிப்பதில் தாமதம் நிலவி வந்ததால், அப்பநாயக்கன்பட்டி மக்கள் திரண்டு கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து சூலூா் - சுல்தான்பேட்டை சாலை, அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.அப்போது, சீரான குடிநீா் வழங்கக் கோரி கோஷமிட்டனா். இதையடுத்து, சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் கலாராணி, அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளா் ராஜசேகா் ஆகியோா் மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு 2 வாரங்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் சூலூா்- சுல்தான்பேட்டை சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடுதல் குடிநீா் தராவிட்டால் போராட்டம்: சூலூரை அடுத்த கலங்கல் ஊராட்சியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்குவதாக கூறி பொதுமக்கள் கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கூடுதலாக 1 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்குவாக வருவாய்த் துறையினா் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.இருப்பினும் சீரான குடிநீா் வழங்காததால், கலங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட காசிகவுண்டன்புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற கலங்கல், சின்னக்கலங்கல், காசிகவுண்டன்புதூா் பகுதிகளைச் சோ்ந்த மக்கள், 1 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனா். இதனால், கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.