நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார்

Wait 5 sec.

தமிழ் நாடக உலகின் வளர்ச்சிக்கும், நவீன நாடக மேடையின் உருவாக்கத்துக்கும் அளப்பரிய பங்காற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார். தமிழ் நாடகத்தின் போக்கையே மாற்றியமைத்த அவர், 'நாடகத் தந்தை' என்று போற்றப்படுகிறார்.இவர் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் சென்னையில் பிறந்தார். இயற்பெயர் திருஞான சம்பந்தம். சென்னை பிராட்வே இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்வராயன் பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். தொடர்ந்து சட்டக் கல்வி பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். அவரது உள்ளத்தை முழுமையாக ஆட்கொண்டது தமிழ் நாடகக் கலைதான். கி.பி 1891 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் தமிழ் நாடகத் துறையில் தீவிரமாகப் பணியாற்றினார். 66 நாடகங்களையும், 9 சிறு நாடகங்களையும் எழுதியுள்ளார். அவற்றில் 'மனோகரா', 'சபாபதி', 'வேதாள உலகம்', 'சுலோச்சனா' உள்ளிட்ட அவரது நாடகப் படைப்புகள் திரைப்படங்களாயின. இவரே நடித்த 'மனோகரா' நாடகம் தமிழ் நாடக உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் எழுதிய 'விசுவாமித்திரர்' எனும் நாடகத்துக்கு அந்த நாளிலேயே ரூ.5 ஆயிரம் சன்மானம் பெற்றார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் அறங்காவலராக 24 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.1959-ஆம் ஆண்டு அவருக்கு 'பத்ம பூஷண்' விருதை மத்திய அரசு வழங்கியது. நூறாண்டுகளுக்கு முன்னால் நாடக மேடையில் அருணாசலக் கவிராயர் எழுதிய நாடகங்களைப் பின்பற்றியே 'அரிச்சந்திரன்', 'மார்க்கண்டேயர் நாடகம்', 'இரணிய விலாசம்' போன்றவை நடிக்கப்பட்டு வந்தன. கற்றவர் போற்றும் சம்பந்தனார் 1930-இல் தம் வாழ்க்கை வரலாறாக 'நாடக மேடை நினைவுகள்' எனும் கட்டுரைத் தொடரை 'சுதேசிமித்திரன்' இதழில் எழுதினார். 1891-இல் சென்னையில் நடைபெற்ற அந்த நாடகத்தைக் கண்ட ஆந்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சார்லு - சரசவிநோதனி சபா குழுவினர் பல தெலுங்கு நாடகங்களை நடத்தினர். 1891-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் 'சுகுணவிலாசம்' நாடகக் குழு ஆரம்பமானது. சுகுணாவிலாச சபைக்கு புதுமைகளைக் கற்பிக்க, மும்பையில் இருந்து பாரசீக நாடகக் குழுவினர் சென்னைக்கு வந்து நாடகங்களை நடத்தினர். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையில் நீண்ட இடைவெளிகள் ஏற்படுவது, மேடையில் தேவையற்ற பொருள்கள் குவிக்கப்படுவது போன்ற நடைமுறைகளை மாற்றி, நாடகத்தை ஒழுங்காகவும் இயல்பாகவும் நடத்த வேண்டும் என்ற புதிய அணுகுமுறையை அவர் உருவாக்கினார்.இந்தப் பாரசீக கம்பெனியார் அன்றே பக்க வாத்தியங்களை மேடையில் படுதாவின் பக்கத்தில் வைக்காமல் அரங்கத்தின் எதிரில் வைத்தனர். பம்மலாரின் சுகுணா விலாச சபை நூற்றுக்கணக்கான நாடகங்களை தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் நடத்தியது. நாடக உலகில் தனித்துவம் பெற்ற பம்மல் சம்பந்தனார் 1964-ஆம் ஆண்டு செப். 24-இல் மறைவுற்றார்.