மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 3) பிரசாரம் மேற்கொண்டார்.பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.அவர் பேசுகையில், “நேற்று முதலமைச்சர் இங்கே ஷூட்டிங் எடுக்க வந்தாரே, அப்போது ஒரு சீனில் டீ குடிக்கிற ஷாட்! அந்த டீயைக் குடித்துவிட்டு, 500 ரூபாய் கொடுத்துவிட்டுப் பந்தா பண்ணிட்டுப் போய்விட்டார்! ஆனால் மக்கள் தினமும் ஒரு டீக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று இவருக்குத் தெரியுமா? இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, ஒரு டீ 10 ரூபாய்! இப்போது 15 ரூபாய்! மளிகைக் கடையில், விலைவாசி பற்றிப் போய்க் கேளுங்கள் ப்ரோ, சி.எம். சார்! அரிசி, சர்க்கரை, காய்கறி எல்லா விலையும் ஏறிவிட்டது!இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அமைச்சரவை - இப்போது இங்கே வந்து மொத்தமாக டேரா போட்டு ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! தோல்வி பயத்தில் மொத்தமாக இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கே ஜெயித்த பிறகு ஒருமுறைதான் முதலமைச்சர் போயிருப்பார். ஆனால், மதுராந்தகத்திற்கு இரண்டு முறை வந்து தெருத் தெருவாகப் போகிறார்!எப்பவுமே முதலமைச்சராக இருக்கிறவர்கள் இடைத்தேர்தலுக்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். பிரசாரம் பண்ணுவதே அரிதுதான். ஏனென்றால், அவர்கள் ஆட்சி மேலயும் அவர்கள் திட்டங்கள் மேலயும் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்பதால் நம்பிக்கையாக இருப்பார்கள்! இப்போது நம்ம முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? அவருக்கே அவர் ஆட்சி மேல் நம்பிக்கை இல்லை.2026 பொதுத் தேர்தலில் பிரசாரத்திற்கு மொத்தமே பத்துக் கூட்டம் கூடப் போட்டிருக்க மாட்டார். அதுவும் வண்டியை விட்டுக் கீழேயே இறங்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு இப்போது என்ன நிலைமை பார்த்தீர்களா? மதுராந்தகம் தொகுதியில் மனித நடமாட்டமே இல்லாத சந்துபொந்தைக் கூட விடாமல் முதலமைச்சர் ஊர்வலம் போகிறார். டீக்கடை, வயல் என்று இப்போதான் தோல்வி பயத்தில் அவர் கால் கீழே இறங்கியிருக்கிறது. உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்!அடிக்கடி பேசினார்களே! 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடிப் போய்விடும் என்று பேசிக்கொண்டு இருந்தார்! இன்றைக்கு, ஒரு தொகுதியில் வாக்கு வாங்கவே குட்டிக்கரணம் அடிக்கிறார். நாளைக்குத் தாராபுரம் தொகுதிக்கும் திரும்பச் சந்து சந்தாக ஷோ காட்டப் போகிறாராம். நேற்று நான் போய்விட்டு வந்தேன். கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். இதேபோலதான், மேடையேற, மேடையைவிட்டு இறங்க முடியவில்லை. அவர் ஒரு பஞ்ச் டயலாக் இப்போது சமீபமாக அரசியல் மேடையில் பேசினார், என்ன தெரியுமா? “வாழ்க்கை ஒரு வட்டம்டா!” ஆம், அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இப்போது அவருக்குத்தான் அது சூப்பராகப் பொருந்துகிறது.ஆனால், ஒன்று சொல்கிறேன்! நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்... எலக்ஷன் முடிந்துவிட்டால் உங்களை அவர் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார். சந்தேகம் இருந்தால் பெரம்பூர் மக்களிடம் போய்க் கேளுங்கள், நன்றாகச் சொல்வார்கள்” என்றார்.மேலும், “முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு, இந்த நான்கு மாத காலத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? தி.மு.க. உருவாக்கிய திட்டங்களை ஆய்வு பண்ணுகிற மாதிரி தினமும் ஒரு ரீல்ஸ் போடுகிறீர்கள்! இதைச் சொன்னால் மட்டும் உங்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். “சொந்தக் காசிலா பண்ணினீர்கள்? மக்கள் பணம்தானே?” என்று கேட்கிறார்.நான் கேட்கிறேன்... கரிகாலன் கல்லணை கட்டினார் என்று சொல்கிறோம். ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயில் கட்டினார் என்று படிக்கிறோம். பெருந்தலைவர் காமராசர் அணைகளை, பள்ளிக்கூடங்களைக் கட்டினார் என்று சொல்கிறோம்! இவர்கள் எல்லாம் சொந்தப் பணத்திலா பண்ணினார்கள் சி.எம்.சார்? இவர்களையும் இதே கேள்வி கேட்பீர்களா? இவர்களையும் சேர்த்துத்தான் நீங்கள் அவமானப்படுத்துகிறீர்களா? இப்போது தங்க மோதிரம் போட்டீர்களே, அது என்ன உங்கள் பணமா? சில தற்குறிகள் அதையும் நம்புகிறார்களே. இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் கொட்டத்தை அடக்க மதுராந்தகம் மக்கள் படுதோல்வியைப் பரிசாகத் தர வேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். இந்த ரீல்ஸ் வெறியர்களுக்கு ஒரு ரியாலிட்டி செக் கொடுக்க வேண்டும்.அடுத்து இன்னொன்றும் சொல்கிறார்... “குறுக்கு வழியில் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தால் அது நடக்காது” என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறார் முதலமைச்சர். சீப் (Cheap) மினிஸ்டர் சார், அவரை இனி சீப் மினிஸ்டர் என்றுதான் இனி சொல்வேன். ஏனென்றால், அவரே தரம்தாழ்ந்து வந்துவிட்டார். குறுக்கு வழியில் சென்று, எம்எல்ஏ-க்களைத் திருடுவது, அ.ம.மு.க. உறுப்பினரைக் கடத்தி ஆதரவுக் கடிதம் வாங்குவது, இதெல்லாம் உங்கள் புத்தி! உங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எங்களுக்குக் குறுக்கு வழி தேவையில்லை. எங்கள் வரலாற்றிலேயே அது கிடையாது! மக்களே நேர்வழியில் உங்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்!பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததுதான் தூய சக்தி ஆட்சியா? சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் பார்க்கிறீர்களே, அதுவும் இதற்காகப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தைக் கூட ரகசியமாக மூடி மறைத்தீர்களே, இதற்குப் பெயர் தூய சக்தியா? ஆந்திராவுக்கு முதலீடுகளை மடைமாற்ற, இந்த ஆட்சியைத் தங்கள் கன்ட்ரோலில் வைத்திருக்கிற ஒரு மாபியா பிளான் பண்ணி வேலை பார்க்கிறார்கள்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, நீங்கள் மட்டும்தான் இது மக்களாட்சி என்று சொல்கிறீர்கள். உண்மையில் இது மர்மமான ஆட்சி. யாரோ ஒருத்தரின் கன்ட்ரோலில், யாருடைய நன்மைக்கோ இங்கே கார்ப்பரேட் மாபியா ஆட்சி நடக்கிறது. எதிலுமே வெளிப்படைத்தன்மை இல்லை. எல்லாம் திரைமறைவில் நடக்கிறது.இன்னும் போகப் போகப் பாருங்கள், இவர்களுடைய முகத்திரை முழுசாகக் கிழியும். டெல்லியில் யார் கூட ரகசியக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியவரும். இவர்களை நம்பிப் போனவர்களும் நட்டாற்றில் நிற்கப் போகிறார்கள்.நீங்கள் 5 நிமிடம் பிரசாரம் பண்ணியதற்கே கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்று நக்கல் பேச்சு பேசுகிறீர்களே? நான் கேட்கிறேன்... கரூரில் பாட்டெல்லாம் பாடினீர்களே, ஏன் ஜெயிக்கவில்லை? விழுப்புரத்தில் வி.சாலை என்று பெயர் வைத்து மாநாடே போட்டீர்களே, அங்கே ஏன் ஜெயிக்கவில்லை? கன்னியாகுமரி போனீர்களே, அங்கே என்ன நிலைமை? ஒரு சீட் கூட வாங்கவில்லையே! திருவாரூர் போய்ப் பொய் பொய்யாகப் பேசினீர்களே, அங்கே என்ன ஆச்சு? உண்மை என்னவென்றால், விஜய் நீண்ட நேரம் பரப்புரை செய்த பெரும்பாலான பகுதிகளில் த.வெ.க. படுதோல்வி அடைந்திருக்கிறது. இதுதான் யதார்த்தம்! மதுராந்தகமும் அந்த லிஸ்ட்டில் சேர வேண்டும்!மக்கள் பிரச்சினையை எழுப்பினால், முதலமைச்சராக அதற்குப் பொறுப்பாகப் பதில் சொல்லுங்கள். எல்லா மேடையிலும் தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., என்று புலம்பினால் மக்கள் பிரச்சினைகள் சரியாகிவிடாது. மக்களும் அதற்காக உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களை நீங்கள் எந்த அளவுக்கு அலட்சியமாக நினைக்கிறீர்களோ, அந்த ஆணவத்தாலேயே நீங்கள் அழிவது உறுதி” எனப் பேசியுள்ளார்.தவெக தூய சக்தி இல்லை, துயர சக்தி: மதுராந்தகத்தில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!While campaigning in Maduranthakam, DMK leader M.K. Stalin severely criticized Chief Minister Vijay.