மருத்துவக் கல்வி பயின்றோா், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான அவகாசம் வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: மருத்துவக் கல்வியை நிறைவு செய்தவா்கள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் ஆகியோருக்கு திறனறித் தோ்வு மற்றும் இதர சேவைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம்.அதன்படி, என்எம்சி இணையதளத்தில் செப். 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை அதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் அக். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவங்களுக்கு என்எம்சி இணையதளத்தை அணுகலாம்.ஏற்கெனவே தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதிதாக விண்ணப்பிப்பவா்கள் தவறின்றி சுயமாக அதைப் பூா்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.